News

இராணுவ அதிகாரிக்காக கொழும்பிற்கு படையெடுத்த முன்னாள் போராளிகள்…

நடிகர் வழி அரசியலர் ரஜினிகாந்த் தெரிந்தோ, தெரியாமலோ தமிழகத்தை பற்றி சொன்னது போல, ஈழத்து வடக்கில் இன்று “சிஸ்டம்” சரியில்லையா? என தன் மனதில் தோன்றியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் இன்று காலை இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும்,

சற்று முன் கர்ணல் பந்து இரத்னப்ரியவுடன் பேசினேன். “ஐந்து வருடங்களாக, ஒரு கணமும் ஆயுதத்தை கையில் எடுக்காமல் பணி செய்தேன். மக்கள் மனங்களை வெல்ல முடிந்தது சார். இனியும் பணி செய்ய காத்திருக்கேன் சார்” என்றார்.

இது பற்றி எனக்கு தெரியும் என்றேன். ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன், கொழும்பில் என் அமைச்சுக்கு படையெடுத்து வந்து என்னை சந்தித்த, பெருந்தொகை முன்னாள் போராளிகள் குழுவினர், இவரது இடமாற்றத்தை ரத்து செய்து தருமாறு மன்றாடி கண்ணீர் விட்டு அழுது கேட்டுக்கொண்டார்கள்.

மூன்று வருடங்கள் இராணுவ சேவையை முடித்தவர்கள் இடமாற்றம் பெற வேண்டும் என்ற பின்னணியில், ஐந்து வருடங்கள் பணியில் இருந்துவிட்ட இவரது இடமாற்றத்தை, மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், சில மாதங்களுக்கு மாத்திரமே தாமதிக்க என்னால் முடிந்தது.

இப்போது இரத்னப்ரிய இடமாற்றம் பெற்று தெற்கின் கம்பஹா மாவட்ட அம்பேபுஸவுக்கு போகிறார். இது இப்படியே இருக்க, பூதாகரமாக எழும் கேள்வி, இது எப்படி?? என்ன காரணம்?

மேற்கண்ட மற்றும் கீழ்வரும் கேள்விகள் பலவற்றுக்கு என்னிடம் பதில்கள் அல்லது கருத்துகள் உள்ளன. அவைபற்றி இங்கு இப்போது சொல்ல வரவில்லை. சொன்னால் வடக்கிலும், தெற்கிலும் இருக்கும் கோமாளிகள் சிலருக்கு கோபம் வரும்.

இதை எதிர்மறையாக பார்க்கலாமா? நேர்மறையாக பார்க்கலாமா? இத்தகையை உபசரிப்பு, “வெளிப்படையான” ஆதரவு, இன்று வடக்கில் அரசியல்வாதிகள் எவருக்கும் இருக்கிறதா? தெரியவில்லை.

அது ஒருபுறம் இருக்க, இன்று “சிங்கள இராணுவம்”, “மங்கல இராணுவம்” (மங்கல, மங்கள இரண்டும் ஒரே பொருள் சொற்கள்) ஆகிறதா? இது நல்லதா? கெட்டதா?

மக்களுடன் கலந்து வாழ்ந்து மனங்களை வெல்ல, வடக்கின் தமிழ் தலைமைகள் தவறி வருகின்றனவா? இது கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்ட போக்கா (tendency) ? அல்லது இப்போக்கு யாழ். குடாவையும் ஆட்கொண்டு வருகிறதா?

நடிகர் வழி அரசியலர் ரஜினிகாந்த், தெரிந்தோ, தெரியாமலோ தமிழகத்தை பற்றி சொன்னது போல, ஈழத்து வடக்கில் “சிஸ்டம்” சரியில்லையா? அல்லது ஒட்டுமொத்த “சிஸ்டமுமே” சரியில்லையா? என்ற வினாவையெழுப்பியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top