இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; விடுதலைப் புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம்…

இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் பொலிஸாரால் மீட்புகப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பெட்டிகளில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதாகவும் இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என பொலிஸார்
சந்தேகிக்கின்றனர்.
இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் இன்று மாலை அவரது வீட்டில் கழிவு நீர் கிணறு தோண்டியுள்ளார். அப்போது சிதைந்த நிலையில் சுமார் 22 பெட்டிகள் கிடைத்துள்ளது.
சந்தேகமான முறையில் இருந்த பெட்டியால் அதிர்ச்சியடைந்த எடிசன் தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷமீனா தலைமையில் 22 பெட்டிகளை சோதனை செய்தனர்.
குறித்த பெட்டிகளில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருந்துள்ளது. இந்த குண்டுகள் அனைத்தும் சுமார் 8 அல்லது 10 வருடங்களுக்கு முன் புதைத்து வைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்தில் இராமநாதபுரம் பொலிஸார் வீட்டின் உரிமையாளர் எடிசனிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் ஜே.சி.பி மூலம் அந்த இடத்தை தோண்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.