இலங்கையில் மீண்டுமொரு யுத்தத்தை நடத்தப்போகிறதா அரசு?

இலங்கையில் யுத்தம் நிறைவுற்ற பின்னரும் பாதுகாப்பிற்கும், இராணுவத்திற்குமே அதிக நிதி ஒதுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். அப்படியானால் இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை அரசு நடத்தப்போகிறதா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியான 2009ஆம் ஆண்டு மகிந்த அரசு பாதுகாப்பிற்காக 177,057 மில்லியன் ரூபாவை ஒதுக்கியது.
எனினும் யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துள்ள போதும் 2018ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பிற்கு 290,711 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு நிதிய திருத்த சட்டமூலத்தை கொண்டு வந்து மேலும் நிதியை அதிகரிக்கும் எதிர்பார்ப்புக்களும் காணப்படுகின்றன. இந்த சம்பவங்களின் அடிப்படையில் இலங்கையில் மீண்டுமொரு யுத்தத்தை அரசு நடத்தப்போகிறதா? என்ற கேள்வி எழுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.