ஈராக் நாட்டில் பயங்கரம்: ஒரே குடும்பத்தினர் 12 பேர் படுகொலை!

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களை அமெரிக்க கூட்டுப்படைகளின் துணையுடன் ஈராக் படைகள் போரிட்டு வீழ்த்தி விட்டது என்று அந்த நாட்டின் பிரதமராக இருந்த ஹைதர் அல் அபாதி கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.
ஆனால் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிந்து விடவில்லை. அதற்கு ஆதாரமாக அங்கு பதற வைக்கிற வகையில் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.
அங்கு உள்ள சலாகுதீன் மாகாணத்தில் அல் பெர்ஜானியா என்ற கிராமத்திற்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவினர். அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேரை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்த தகவல் கிடைத்த உடன் அங்கு பாதுகாப்பு படையினரும், போலீஸ் படையினரும் விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். கொல்லப்பட்ட 12 பேரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர சம்பவத்தால் சலாகுதீன் மாகாணத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.