உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுகிறார் ஜனாதிபதி-சுமந்திரன்.

நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட அனைத்து செயற்பாடுகளும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்தே நடைபெற்றதாகவும், தற்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர் கூறிவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களினால் அரசியல் தீர்வு விடயம் சவால் மிக்கதொன்றாக மாறியிருக்கின்ற போதிலும், அரசியல் தீர்விற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
இதேவேளை, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு ஜே.வி.பி. தனிநபர் பிரேரணை கொண்டுவந்துள்ள நிலையில, அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு ஏன் தனிநபர் பிரேரணை முன்வைக்கக் கூடாது என வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த சுமந்திரன், தனிநபர் பிரேரணை ஊடாக அரசியலமைப்பு திருத்தசட்டமூலமொன்று கொண்டு வந்தால் அது ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாக அமையும். எனவே, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த தீர்வையும் முன்வைக்க கூட்டமைப்பு தயார் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மாதுலுவாவே சோபித்த தேரரின் 76ஆவது ஜனன தின நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, 100 நாள் வேலைதிட்டம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது மிகவும் தவறான முடிவு எனவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.