எத்தியோப்பியாவில் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு: குண்டு வெடிப்பில் பிரதமர் உயிர் தப்பினார்…

எத்தியோப்பியா நாட்டில் பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், பிரதமர் அபிய் அகமது உயிர்தப்பினார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் ஹைலேமரியம் தெசலேக் என்பவர் பிரதமராக இருந்து வந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகியதைத் தொடர்ந்து அங்கு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி புதிய பிரதமராக பதவி ஏற்றவர், அபிய் அகமது (வயது 41).
இவர், ஒராமோ மக்கள் ஜனநாயக அமைப்பு கட்சியின் தலைவரும் ஆவார். ராணுவ வீரராக இருந்து பிரதமர் பதவிக்கு உயர்ந்த இவர், பலதரப்பட்ட இன குழுக்களின் ஆதரவை பெற்றவர் என நம்பப்படுகிறது.
பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு சீர்திருத்தங்களை அவர் கோடிட்டுக் காட்டி வந்தார்.
இவர் அந்த நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் நேற்று பேரணியின் நிறைவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து அவரது பேச்சை கேட்டனர்.
அவர் பேசி முடித்ததும் அந்த கூட்டத்தில் திடீரென பலத்த சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.
பிரதமர் அபிய் அகமதுவை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து பத்திரமாக அழைத்துச்சென்று விட்டனர்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். மீட்புப்படையினரும் விரைந்தனர். ஆம்புலன்சுகளும் விரைந்தன.
இந்த குண்டுவெடிப்பில் பிரதமர் அபிய் அகமது உயிர் தப்பினார். பலர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பு பிரதமர் அபிய் அகமதுவை குறி வைத்துத்தான் நடத்தப்பட்டதாக யூகங்கள் எழுந்து உள்ளன. இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் அபிய் அகமது செய்தி விடுத்து டெலிவிஷனில் பேசினார். அப்போது அவர், “குண்டுவெடிப்பில் சில எத்தியோப்பியர்கள் காயம் அடைந்து உள்ளனர். சிலர் தங்கள் உயிரை இழந்து உள்ளனர். எத்தியோப்பியா ஒருங்கிணைந்த நாடாக திகழ்வதை விரும்பாத சில சக்திகளின் முயற்சி இது. ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை” என்று கூறினார்.
இருப்பினும் இந்த சம்பவம் பற்றி பிரதமர் அலுவலக பணியாளர்களின் தலைவர் பிட்சும் அரேகா பின்னர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், குண்டுவெடிப்பில் 83 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர்ப்பலி ஏதும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்த குழுவை சேர்ந்த சீயோம் டேஷோம் குண்டுவெடிப்பு பற்றி குறிப்பிடுகையில், “பொதுக்கூட்டத்தில் வெடிக்கப்பட்டது கையெறி குண்டு ஆகும். பிரதமர் இருந்த மேடையை குறிவைத்துத்தான் அந்த குண்டு வீசப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டார்.
பிரதமர் அபிய் அகமதுவை குறி வைத்துத்தான் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டாலும், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார் என்பது அவரது ஆதரவாளர்களை நிம்மதிப்பெருமூச்சு விட வைத்து உள்ளது.