எம்முடன் இருப்தே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பானதாகும் – ரணில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகள் மீண்டும் தீவிரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் , நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பான அணுகுமுறையாக அமையும் என்று கூறியதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசணையை கொண்டிருப்பதாக தெரிகின்றது.
ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைத்து கொள்வதிலும் ஜனாதிபதி நாட்டம் காட்டுகின்றார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாறு அவர் செய்வாரேயானால் , அது அவருக்கு பாதகமானதாகவே இறுதியில் முடியும் என்றும் பிரதமர் விக்ரமசிங்க குறிப்பிட்டதாக தெரியவருகின்றது.
கடந்தவாரம் கொழும்பு – இலங்கை மன்ற கல்லூரியில் நடைப்பெற்ற காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் நினைவுதின வைபத்திற்கு அழைப்பில்லாது சென்று கலந்துகொண்ட ஜனாதிபதி சிறிசேன தன்னைப்பற்றியே கூடுதலாக விமர்சித்திருந்தமை குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்திய விக்ரமசிங்க , அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் 2020 வெற்றி இலக்கை மையப்படுத்திய 18 மாதகால திட்டவியூகம் வகுக்கப்பட்டிருப்பதால் அதற்காக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதே இன்று முக்கியமானது என்றும் ஊடகவியலாளர்களிடம் கூறியதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.
கோத்தபாய ராஜபக்ஷ தீவிரமான பிரசாரங்களில் இறங்கியிருக்கின்றார். களத்தில் அவரது பிரவேசத்தை பருவம் முந்தியதாகவே நான் கருதுகின்றேன். அவர் இவ்வாறு செய்வதற்கு பிரதான காரணம் அவரது இளைய சகோதரர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலாகும் என்று நம்புகின்றேன்.
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை அது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையில்லை. நாட்டுமக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியே எம்மை தெரிவு செய்தார்கள். அந்த மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்மை அர்ப்பணிப்பதே அவசியமானது. இதற்காகவே 18 மாதகால திட்டவியூகம் வகுத்திருக்கின்றோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டதாக கூறப்படுகின்றது.
தனது கடந்த வாரத்தைய யாழ்ப்பாண விஜயம் குறித்து கருத்து வெளியிடுகையில் , அரசியல் நோக்கங்களுக்காக வடக்கு அரசியல்வாதிகள் மத்தியல் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை நிராகரிக்க கூடாது. அவ்வாறு செய்வதால் மக்களின் வாழ்வாதாரத்தை அது மிகவும் மோசமாக பாதிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.