கஜேந்திரகுமாரை மீண்டும் கூட்டமைப்பில் இணைத்தால் தனிக்கட்சிக்கான தேவை இல்லை! – முதலமைச்சர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரை மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டு செயற்பட்டால் தனிக்கட்சி அமைத்துச் செயல்படும் தேவை இருக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடந்தவாரம் அவசரமாக முதலமைச்சரைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம், மாகாண சபைத் தேர்தலில் முதல்வரின் நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
தனித்துத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றோ அல்லது கூட்டமைப்பைச் சிதைக்க வேண்டும் என்றோ நான் எண்ணவில்லை. இருப்பினும் அனைத்தும் மக்களின் விருப்பமே. அதேநேரம் கூட்டமைப்பு ஆரம்பிக்கும்போது அதனுள் இருந்த அனைவரும் கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும். இந்த வகையில் கஜேந்திரகுமார் மீண்டும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனையவை கட்சிக்குள் பேசித் தீர்க்கக் கூடியவைகள். கூட்டமைப்பிலும் மாவை. சேனாதிராசா, சம்பந்தன் போன்றவர்களுடன் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. இருப்பினும் ஒரு சிலரே மாறுபட்டுக் காணப்படுகின்றனர். என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.