Canada

கனடாவில் தமிழ் கலாசாரத்தை எடுத்துக்காட்டும் அரிய நிகழ்வு….

கனடா ஸ்காபுறோ பெரிய சிவன் கோவில் வருடாந்த மகோற்ஸவ பெருவிழா மிகவும் சிறப்பாக முடிவடைந்தது. 2018 பஞ்ச ரத பவனி மிகவும் சிறப்பாக நடந்தேறியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விநாயகர், முருகன், பெருமாள், சிவன் மற்றும் சண்டேஸ்வரர் அமர்ந்திருந்து பஞ்ச ரத பவனி மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

இருபதுக்கும் மேலான நாதஸ்வர தவில் வித்துவான்கள் பங்குபற்றி மிகவும் சிறப்பாக இசை முழங்கினார்கள். வசந்த மண்டப பூஜை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சிதம்பர கலாமன்ற நாட்டிய பள்ளிமாணவர்கள் மிகவும் சிறப்பான நடனத்தினை வழங்கினார்கள். கௌரி பாபு ஆசிரியையின் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறார் செந்தமிழ் முதுபெரும் மூதாட்டி ஔவையார். “திருக்கோயில் இல்லாத திருவி லூரும், திருவெண்ணீ றணியாத திருவி லூரும், பருக் கோடிப் பத்திமையாற் பாடாவூரும், பாங்கினொடு பல தளிகளில்லா வூரும், விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும், விதானமும் வெண்கொடியு மில்லா வூரும், அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும், அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே” என்று திருக்கோயில் இல்லாத ஊரை அடவி காடு என குறிப்பிடுகிற அப்பர் பெருமான் “ஒருக்காலும் திருக்கோயில் சூழாராகில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் ராரே” என்று வருந்துகின்றார்.

இவை ஆலய வழிபாடு ஆன்மா இறைவன்பால் லயப்படுவதற்கு அவசியம் என்பதால் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என அப்பரடிகள் வலியுறுத்துவதை உணரலாம். கனடாவில் ஏராளமான இந்து ஆலயங்கள் இருந்தபோதும் முழுமுதல் கடவுளாகிய சிவபெருமானுக்கு ஓர் சிவன் ஆலயம் அமையவேண்டுமென்ற நோக்கோடு அமைந்த ஆலயமே ஸ்காபுறோவில் எழுந்தருளியிருக்கும் பெரிய சிவன் ஆலயமாகும்.

தமிழர் கலையும் கலாச்சாரத்தையும் தமிழோடு சேர்த்து வளம்பெற அமைந்த கனடா நாட்டில் பெரிய சிவன் கோவில் ஸ்காபுறோவில் அமைந்திருப்பது தமிழர்களாகிய எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். பெரிய சிவன் ஆலயத்தின் வருடாந்த மகோற்ஸவ பெருவிழாவில் பஞ்சரத பவனி ஓர் வரலாற்று சாதனையாக கருதப்படுகின்றது. பஞ்ச ரதங்களில் “பெருமாள்” பெருமானுக்கான புதிய சித்திரத்தேரினை ஈழத்தில் புகழ்பூத்த சிறபாச்சாரியார் விஸ்வப் பிரம்மஸ்ரீ கலைமகுட கலாமோகன் கிருஷ்ணர் அவர்களின் வழிகாட்டலிலும், நெறியாட்கையிலும், கனடாவில் வாழ்ந்துவரும் இரு இளம் சிற்பகலைனர்களான பிரகாஷ் மற்றும் திவாகர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட அழகிய சித்திரத்தேர் வெள்ளோட்ட மற்றும் பஞ்சரத பவனிவரும் கண்கொள்ளா காட்சியும் நடைபெற திருவருள் பாலித்துள்ளது.

ஓர் சித்திரத் தேருக்கு இருக்க வேண்டிய முக்கியமான கூறுகளை அளவுப்பிரமாணங்களுக்கு அமைய வித்திட்ட சித்திரத்தேர் வித்தகர், சித்திரத் தேர்களின் இமயம், சித்திரத்தேர் அரசர், சித்திர சிற்பி, கலாகேசரி அரசர் மற்றும் பல சித்திர தேர்களை இலங்கையில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்களை உருவாக்கிய மாண்புமிகு கலாமோகன் கிருஷ்ணர் அவர்கள் இன்றைய வெள்ளோட்ட மற்றும் பஞ்சரத பவனிவரும் திருவிழாவிலும் கலந்துகொள்வதற்காக கனடாவில் கால்பதித்திருக்கும் அவர்களை இதயபூர்வமாக வரவேற்பதில் பெரிய சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தா மற்றும் கலாநிதி அடியார் விபுலானந்தா அவர்களுடன் கனடாவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பெருமிதம்கொள்கின்றோம்.

கல்லும் உலோகமும் செங்கலும் மரமும், மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும், கண்ட சருக்கரையும் மெழுகும், என்றிவை, பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன கற்றுத்தேர்ந்த சிட்ப சிம்மரசர் மாண்புமிகு கலாமோகன் கிருஷ்ணர் அவர்களின் பல அழகிய சித்திரத்தேர்களினை உருவாக்கிய பல்லாண்டுகால சேவையினை பாராட்டி “சித்திரத்தேர் இமயம்” என்ற உயரிய விருதினை பெரிய சிவன் ஆலயத்தின் சார்பாக வழங்கி வாழ்த்துகின்றோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய சிவன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவின் பஞ்சரத பவனி மிகவும் சிறப்பாக நடைபெற திருவருள் பாலித்துள்ளது. சைவ உலகில் ‘கோயில்’ என்றால் சிறப்பாகக் கருதப்படுவது ”சிதம்பரம்” என்னுந் திருத்தலமேயாகும்.

அதேபோன்று இன்று ஈழத்தில் கோயில் என்றால் சிறப்பாகக் கருதத்தக்கது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலேயாகும். இந்தவரிசையில் கனடாவில் ஓர் வரலாற்று சாதனையாக பஞ்ச ரத பவனியை அறிமுகப்படுத்தியதில் கலாநிதி அடியார் விபுலானந்தா அவர்கள் முத்திரை பதித்துள்ளார்கள் என்றால் அதில் வியப்பில்லை. அடியார் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் ஆலயத்தினை நிர்வகித்துவருவதுடன், வருடாந்த மகோற்ஸவ விழாக்களினை மிகவும் சிறந்த முறையில் நடத்திவருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

சிறப்பாக பஞ்ச ரதங்களினை ஏராளமான பணச்செலவில் உருவாக்கியது மட்டுமல்லாமல் பஞ்ச ரத பவனியை மிகவும் சிறந்த முறையில் இன்று நடத்த இருப்பதையிட்டு புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களாகிய நாங்கள் பெருமிதம்கொள்கின்றோம். சைவ சமயத்தினை அழிந்துவிடாமல் பாதுகாத்துவருவதுடன், ஓர் சிறந்த ஆலயத்தினையும் மிகவும் சிறந்த முறையில் நிர்வகித்துவருவதுடன், கனடாவில் ஓர் வரலாற்று சாதனையாக பஞ்ச ரத பவனியினை அறிமுகப்படுத்திய ஆன்மீகத்தலைவர், சைவப்பணி வித்தகர், ஆன்மீக பேச்சாளர், சமூகத்தலைவர் கலாநிதி அடியார் விபுலானந்தா அவர்களின் சேவைகளை பாராட்டி “வரலாற்று சரித்திர நாயகர்” என்ற உயரிய விருதினை வழங்கி கௌரவிக்கின்றோம். விழாவின் இறுதியில் மிகவும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்ட்து.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top