Canada

கனடா ரொறன்ரோ பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு விசேட சலுகை .

பாரதியின் கனவை நனவாக்கும் புலம் பெயர் தமிழர்களின் முனைப்பில் முதல் வடிவமாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை சமீபத்தில் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கனடாவின் ரொறொண்டோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை ஒன்று அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் தமிழுக்கான இந்த இருக்கை மிகவும் அவசியமானதே.

ஹார்வார்ட் தமிழ் இருக்கையை உருவாக்கிய அமைப்பினரும் (Tamil CHair Inc) கனடிய தமிழர் பேரவையும் (CTC) இணைந்து ரொறொண்டோ பல்கலைக் கழக தமிழ் இருக்கையை உருவாக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் உத்தியோக பூர்வமான அறிவிப்பும் நிதியீட்டு நிகழ்வும் சென்ற திங்கள் நாள் (25-06-2018) ரொறொண்டோ பல்கலைக் கழக ஸ்காபரோ வளாகத்தின் மில்லர் லாஷ் வாடியில் நடைபெற்றது.

இவ் விழாவை ரொறொண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாக நிர்வாகத்துடன் கனடிய தமிழர் பேரவையும் சேர்ந்து ஒழுங்கு செய்திருந்தன. பல்கலைக் கழகத்தின் உப தலைவர் புரூஸ் கிட் , நிர்வாகி ஜோர்ஜெட் சினாட்டியுடன் கனடிய தமிழ் இருக்கையின் நிர்வாகிகளான சிவன் இளங்கோ, எழுத்தாளர் முத்துலிங்கம், மருத்துவர் வ.ரகுராமன் ஆகியோருடன் கனடிய தமிழர் பேரவை நிர்வாக இயக்குனர் டான்ரன் துரைராஜா ஆகியோர் விழாவை முன்னின்று நடாத்தினர்.

ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்தாலும் உலகம் முழுவதிலுமுள்ள பிரதான பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகளை நிறுவ வேண்டும் என்ற பெருவிருப்போடு இதன் நிறுவனர்கள் ஆரம்பித்த தமிழ் இருக்கை நிறுவனத்தின் (Tamil Chair Inc.) பிரதிநிதிகள் பலரும் இதில் பங்கு பற்றியதோடு பெருந்தொகையான நன்கொடைகளையம் வழங்கியிருந்தார்கள். மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், புரவலர் போல் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் அமெரிக்காவில் இருந்து வந்து தமது நன்கொடைகளை வழங்கி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் க. பாண்டியராஜன் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். நன்கொடையும் வாழ்த்தும் வழங்கினார் முனைவர் ஆறுமுகம். கனடாவின் தமிழ்ப் பக்தை திருமதி பிரெண்டா பெக் (Brenda Beck) அவர்கள் பெருந்தொகையான பணத்தை நன்கொடையாக வழங்கியிருந்தார். கனடிய தேசிய கீதத்தை ‘செந்தூரா’ புகழ் லக்ஸ்மி பாட அதைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்கா தமிழ் இருக்காய் கீதத்தை இசைத்தார். ஸ்ரீமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் நித்தியா கலாஞ்சலி மாணவிகள் நடன விருந்து அளித்தனர்.

கனடிய பாராளுமன்ற உறுப்பினர் திரு கரி ஆனந்தசங்கரி அவர்கள் தமிழ் இருக்கையின் அவசியம் பற்றி உரையாற்றினார். பல்கலைக் கழகத்தின் உபதலைவர் புரூஸ் கிட் உரையாற்றியபோது “ஒரு இரவில், இரண்டு மணி நேரத்தில் ஏறக்குறைய $600,000 கனடிய டொலர்களை (இந்திய ரூ. 3.12 கோடி) நன்கொடை சேர்க்கப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் இதுவே முதல் தடவை. தாம் எதிர்பார்க்கவே இல்லை” எனக் கூறினார்.

சுமார் இருநூறு பேர் இவ் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். மக்கள் அணிவகுத்து வந்து தமது நன்கொடைகளை வழங்கியிருந்தார்கள். சில சமூக அமைப்புக்களும் முன்வந்து நன்கொடைகளை வழங்கியிருந்தனர். தனக்கென்றொரு நாடில்லை என்று தமிழ்த் தாயை வருந்தவிடாது உலகமெலாம் உன்னை அரியாசனம் ஏற்றுவோம் என்று புறப்பட்டிருக்கும் இம்மைந்தர்களது முயற்சி கைகூட வேண்டும், பாரதியின் கனவு மெய்ப்படவேண்டும். இதற்கு உலகெலாமிருந்தும் தமிழர்கள் தமது ஆதரவை நல்க வேண்டும். இதற்கான நன்கொடைகள் ரொறொண்டோ பல்கலைக்கழகத்திற்கே வழங்கப்படுகிறது. (கனடியர்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படும்)

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top