கவுதமாலாவில் எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 109ஆக உயர்வு…

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது.
கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு அருகே அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை இந்த எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. இதில் இருந்து 700 டிகிர் செல்சியஸிற்கும் கூடுதலான வெப்பம் கொண்ட ‘லாவா’ வெளியேறியதுடன் கரும்புகை மற்றும் சாம்பலானது தலைநகர் உள்பட பிற பகுதிகளுக்கு பரவின.
எரிமலையில் இருந்து 10 கி.மீட்டர் உயரத்துக்கும் மேல் சாம்பல் புகை வெளியேறியது. பல கிராமங்கள் புதைந்து போயுள்ளன. அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டு உள்ளன. இது மீட்பு பணியில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
மேலும் இந்த எரிமலை வெடிப்பில் 200 பேருக்கு மேல் காணமல் போய் உள்ளனர். அவர்களை தேடும் பணியில் எச்சரிக்கையுடன் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் எரிமலை வெடிப்பில் 109 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கவுதமாலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.