கவுதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 62 பேர் பலி !!
கவுதமாலாவில் 62 பேரை பலி வாங்கிய பியூகோ எரிமலை வெடித்துச் சிதறிய சில மணி நேரங்களில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கவுதமாலாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள Champerico நகரில் இருந்து 65 மைல்கள் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
பியூகோ எரிமலை வெடித்துச் சிதறிய நிலையில் இந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மரங்கள் கருகி உள்ளன. மேலும் சாலைகளிலும், வாகனங்களிலும் சாம்பல் படிந்துள்ளது. எரிமலை வெடித்து சிதறியதால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இதுவரை 62 பேர் மரணமடைந்துள்ள நிலையில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிமலை வெடித்ததால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள எஸ்குன்ட்லா, சிமால்டெனாங்கே மற்றும் ஸ்கேட்டிபிகுயிஸ் பகுதிகளில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அடர்ந்த சாம்பல் பரவி வருவதால் கவுதமாலா சிட்டி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஓடுதளத்தில் படிந்துள்ள சாம்பலை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் எரிமலை சீற்றத்தை வேடிக்கை பார்க்க சென்றவர்களே விபத்தில் சிக்கி கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.