காணிகள் விடுவிப்பு குறித்து. ஜனாதிபதி, பிரதமர், படைத் தளபதிகளுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்.

வடக்கு -கிழக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை துரிதமாக விடுவிப்பது என்பது தொடர்பாக, அரசாங்கத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்துக்கு பயணம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியதாகவும், இதையடுத்து, ஜனாதிபதிக்கும், பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த இந்த சந்திப்பின்போது காணிகனை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
“இந்த சந்திப்பின்போது பல வருடங்களாக இழுபறியில் இருக்கும் காணி விடுவிப்பு தொடர்பில் நாம் வலியுறுத்தினோம். அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்களில் காணிகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. எனினும் இரண்டரை வருடங்கள் கடந்தும் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.” என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.