கிளிநொச்சிக்கு வருகிறார் ஜனாதிபதி! – சுதாகரனுக்கு விடுதலை அளிப்பாரா?

தாயை இழந்து, தந்தையின் அரவணைப்புக்காக ஏங்கித் தவிக்கும் ஆயுள் தண்டனைக் கைதியான ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளுக்கும், இன்று தீர்வு கிடைக்க வேண்டுமென்றும் அப்பிள்ளைகளின் கண்ணீரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துடைக்க வேண்டுமென்றும், பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
சுகவீனம் காரணமாக, ஆனந்த சுதாகரனின் மனைவி, அண்மையில் உயரிழந்தார். இந்நிலையில், அவரது இரண்டு பிள்ளைகளும் பெற்றோரின் அரவணைப்பின்றி, உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தாயை இழந்த இரு பிள்ளைகளுக்கும், தந்தையின் அரவணைப்பு கிடைக்கவேண்டி, ஆயுள்தண்டனைக் கைதியான ஆனந்த சுதாகரனை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென்று, நாடளாவிய ரீதியில், கையெழுத்துப் போராட்டங்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, எமக்கு நல்ல பதிலொன்றைத் தருவாரென்ற நம்பிக்கை இருப்பதாக, ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளும் அவர்களைப் பராமரித்து வரும் அவர்களது பாட்டியும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஜனாதிபதியிடம் தாங்கள் கடிதம் ஒன்றைக் கையளிக்க இருப்பதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தேசத்தின் உயிர்நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களது உள, உடல் விருத்திக்கான சிறந்த சூழலைக் கட்டியெழுப்பும் நோக்குடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படும் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்றிட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு, கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில், இன்று முற்பகல் 10 மணிக்கு, ஜனாதிபதி தலைமையில் நடைபெறுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.