News

கூட்டமைப்பின் முகத்தில் எட்டி உதைந்துவிட்டார் மைத்திரி! – ஸ்ரீதரன் எம்.பி .

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தனது ஆட்சியை அமைக்க உதவிய ஏணியை உதறித் தள்ளியது மட்டுமல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகத்தில் எட்டி உதைந்து விட்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, ஆனால் இன்னும் வடக்கில் அபிவிருத்திகள் எவையும் இடம்பெற்றவில்லை, மாறாக இராணுவ குவிப்பு மட்டுமே இடம்பெற்று வருகின்றது. இலங்கையில் ஏனைய மாகாணங்களில் இல்லாத அளவில் இன்று வடக்கில் இராணுவம் குவிக்கப்படுகின்றது. இராணுவத்தின் மூலமாக சகல நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர். ஆனால் இன்று ஒரு மாயையை உருவாக்கி வடக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

சிங்கள மக்கள் இராணுவ உதவியுடன் வடக்கை ஆக்கிரமித்து வருகின்றனர். அதற்காகத்தான் இன்று வடக்கிற்கு நிதி ஒதுக்கப்படுகின்றாதா? இவற்றின் மத்தியில் வடக்கின் மக்கள் இன்று வேதனையில் உள்ளனர். பாரம்பரிய தொழிலில் ஈடுபடும் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் மக்களின் ஆணைக்கு அமைய தீர்மானம் எடுத்தோம். எம்மை பொறுத்தவரையில் மைத்திரபால சிறிசேனவும் எமக்கு எதிரி, மஹிந்த ராஜபக்ஷவும் எதிரி. ஆகவே அவர்களில் எந்த எதிரியை ஆதரிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டபோது அதற்கு மக்களின் ஆணை வழங்கப்பட்டது.

ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முகத்தில் எட்டி உதைந்துவிட்டார். ஏற்றிவைக்க உதவிய ஏணியையும் உதறித்தள்ளி விட்டார். இந்த நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் அரசியல் வாதிகள் அனைவரும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

ஆகவே எமது பிரச்சினைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று சர்வதேச தலையீடுகளுடன் தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top