கோட்டைக்குள் படையை அமர்த்த அனுமதிக்கோம்! பிரிட்டன் தூதுவரிடம் யாழ். மாநகர மேயர் தெரிவிப்பு…

“யாழ்ப்பாணம், நகரத்துக்குள்ளோ அல்லது கோட்டைப் பகுதிலோ இராணுவத்தை அமர்த்த அனுமதிக்க முடியாது என்று பிரிட்டன் தூதுவரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இ.ஆனோல்ட் தெரிவித்தார். இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டேரிஸ்க்கும் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயருக்கும் இடையே நேற்று சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது, “யாழ்ப்பாணம் மாநகர சபையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினோம். எமது அபிவிருத்திக்கு பிரிட்டனின் பங்களிப்பையும் கோரியுள்ளோம். யாழ்ப்பணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை யாழ்ப்பாணம் நகரில் உள்ள கோட்டைப் பகுதியில் அமர்த்துவது தொடர்பில் எமது நிலைப்பாடு என்ன எனத் தூதுவர் வினவினார்.
யாழ்ப்பான நகரத்துக்குள்ளே அல்லது யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியிலோ இராணுவத்தை அனுமதிக்க முடியாது. இராணுவத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றே கோரிக்கை விடுக்கின்றோம் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து தற்போது யாழ்ப்பான மாநகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் மாகாண சபையின் அனுபவங்கள் தொடர்பிலும் பகிர்ந்து கொண்டோம். அதில் வடக்கு மாகாண சபை பல விடயங்களைச் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். நான் உறுப்பினராக இருந்தவன் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக்கொண்டேன்” – என்றார்.