கோத்தபாய என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சுகின்றது அரசாங்கம்! மஹிந்த .

அரசியல் ரீதியாக சேறு பூசும் நோக்கில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக தாம் சீனா நிறுவனமொன்றிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக வெளியான செய்தி எதிரிகளால் சேறு பூசும் நோக்கில் உருவாக்கப்பட்டது என மஹிந்த ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றிட்கு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும், அரசாங்கம் பதவியை ஏற்றுக்கொண்டது முதல் ராஜபக்ச குடும்பத்திற்கு சேறு பூசுவதனை மட்டுமே செய்து வருகின்றது. நாட்டு மக்கள் இது குறித்து நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ராஜபக்ச குடும்பத்திற்கு மட்டுமல்ல, கோத்தபாய என்ற பெயரை கேட்டாலே அரசாங்கம் அஞ்சுகின்றது.
அரசாங்கத்தின் பெரிய புள்ளிகளைப் போன்றே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நெத்தலிகள் கூட எமக்கு சவால் விடத் தொடங்கியுள்ளன. இந்த அனைத்து சவால்களுக்கும் எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் நல்ல பதிலளிப்பார்கள் என மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.