India

சட்டப்பேரவையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ வழக்கில் தீர்ப்பு இன்று ஐகோர்ட்டில் வெளியாகிறது, தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்?

சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. தமிழக அரசியலில் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பையும், மாற்றத்தையும் ஏற்படுத்தவுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததையடுத்து 18 எம்எல்ஏக்களை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார்.

அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி ஆஜராகி வாதிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிடும்போது, கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் பதிலளித்து வாதிடும்போது, எடியூரப்பா வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த கடிதத்தை போலதான் நாங்களும் மனு கொடுத்தோம். இதுகட்சி தாவல் இல்லை. எடியூரப்பா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இதுவரை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படவில்லை என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி கடந்த ஜனவரி 24ம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக இந்த தீர்ப்பு வெளியிடப்படாததால், தீர்ப்பை விரைவில் வெளியிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும். எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது நீதிபதிகளுக்குத் தெரியும் என்று தெரிவித்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்சில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்ந்து விசாரித்த நீதிபதி சுந்தர், தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். இதனால் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டுமானால், நீதிபதி சுந்தர் சென்னைக்கு வரவேண்டும். அவர் ஏற்கனவே தனது தரப்பு தீர்ப்பை எழுதிவிட்டார் என்று கூறப்படுகிறது. தலைமை நீதிபதியும் தீர்ப்பை எழுதிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மதுரையிலிருந்து நீதிபதி சுந்தர் சென்னை புறப்பட்டுள்ளார். எனவே, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படவுள்ளது. பிறபகல் 1 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளிக்கவுள்ளது. இந்த தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் இது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றால், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதில் குறைந்தது 6 தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டுமே எடப்பாடி அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும். சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று உத்தரவிடப்பட்டால், 18 பேரும் எம்எல்ஏக்களாக கருதப்படுவார்கள். தற்போது நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அரசுக்கு எதிராக 123 பேர் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எடப்பாடி அரசுக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவுதான் தற்போது உள்ளது. இதனால் அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். இதனால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேல்முறையீட்டுக்கு வக்கீல்கள் தயார் தீர்ப்பு டிடிவி தினகரன் அணிக்கு சாதகமாக வந்தால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக ஆளுநரிடம் முறையிடலாம். அதே நேரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பு வக்கீல்களும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வக்கீல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக வக்கீல்கள் மத்தியில் கூறப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு 18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுவதையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படவுள்ளனர். நீதிமன்ற அறைக்கு வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் மற்றும் வக்கீல்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உரிய வழக்கு ஆவணங்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உயர் நீதிமன்றத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கவுள்ளனர்

Latest News

To Top