சத்தத்தை அடக்குவதற்கே எம்.பிக்களுக்குப் பதவிகள்: மஹிந்த அணி சாடல்…

கூட்டரசுக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க, பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மஹிந்த அணியான பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த சிலருக்குப் பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. சமாளிப்புக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டரசின் செயற்பாடுகள் மீது அதிருப்தியடைந்து, எதிர்காலத்தில் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அவர்களின் வாயை அடைத்து, திருப்திபடுத்துவதற்காகப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் அரசுக்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் தீரும் என்று அரச தலைவரும், தலைமை அமைச்சரும் எதிர்பார்க்கின்றனர். இது தவறாகும்.
எதிர்காலத்தில் புதுப்புது பிரச்சினைகள் உருவாகும். தலையிடிக்குத் தலையணையை மாற்றுவதுபோல் அமைச்சரவை மாற்றுவதால் பிரச்சினை தீராது.
தேர்தலுக்குச் செல்வதே சிறப்பான நடவடிக்கையாக அமையும் என்று மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.