News

சரணடைந்தோர் பட்டியல் காணாமல்போனோருக்கான பணியகத்திடம் இல்லையாம்!

“போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியல் எமது பணியகத்திடம் இல்லை” என்று காணாமல்போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
காணாமல்போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது பொது அமர்வு நேற்றுமுன்தினம் முல்லைத்தீவில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இந்த அமர்வு இடம்பெற்றபோது செயலகத்துக்கு வெளியே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
காணாமல்போனோருக்கான பணியகத்தின் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்றும், படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை முதலில் வெளியிடுமாறும் அவர்கள் தெரிவித்தனர்.
இவர்களுடன் பேச்சு நடத்திய காணாமல்போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், எழுத்துமூலம் கோரிக்கை விடுத்தால் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடமுடியும் என்று கூறினார் என செய்திகள் வெளியாகின.
இதையடுத்து பலரும் பட்டியலை அவரிடம் கேட்டுள்ளனர். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இன்று கருத்து வெளியிட்டுள்ள சாலிய பீரிஸ்,
“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை நான் சந்தித்தேன். எழுத்துமூலம் கோரிக்கையொன்றை விடுத்தால், படைத்தரப்புடன் பேசிப் பார்க்கலாம் எனக் கூறினேன். எம்மிடம் பட்டியல் இருப்பதாகக் கூறவில்லை. இது தொடர்பில் தவறாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது” – என்று தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top