சர்ச் அருகில் பாதசாரிகள் மீது கார் மோதியதில் 13 பேர் காயம் : இருவர் நிலைமை கவலைக்கிடம் !

அயர்லாந்தில் பிரபல சர்ச் அருகே நடந்த கார் விபத்தில் 13 பாதசாரிகள் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Dublin னில் உள்ள Clondalkin church அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியது. காரை ஓட்டி வந்த பாதிரியாருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாகவே கார் தன் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிய வருகிறது.
இந்த சம்பவம் நடைபெற்ற போது ஒருவருக்கு இறுதி மரியாதையை செலுத்தப்பட்டு கொண்டிருந்தது எனவும் அவர்கள் அனைவரும் அலறியபடி அங்குமிங்குமாக ஓடினர் எனவும் தெரியவருகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் இதுபற்றி ட்விட்டரில் கூறியிருந்தார்.
பாதிரியாருக்கு திடீரென உடல்நலமில்லாமல் போனதால் இவ்வாறு நிகழ்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியிருந்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது செய்யப்பட இருந்த இறுதி அஞ்சலி மற்றும் சவ அடக்கம் நிகழ்ச்சியும் இந்த விபத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியினர் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.