சிக்கிக்கொண்ட பெண் அரசியல்வாதி! நாமலுக்கும் தொடர்பு?
மத்திய வங்கி ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த முக்கிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய சூழலில் மத்திய வங்கி ஊழலுடன் பல அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையிலேயே ஐ.தே.கவின் இராஜாங்க அமைச்சர் ஒருவரும், கொழும்பின் பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரும் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக் கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இருவரில் இராஜாங்க அமைச்சருக்கு 40 இலட்சங்களும், பெண் அரசியல்வாதிக்கு 10 இலட்சங்களும் வழங்கப்பட்டமைக்காக சாட்சியும், ஆதாரங்களும் விசாரணைகளின் போது சிக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, “அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் பணம் பெற்றுக் கொண்டுள்ளார்” என ஜே.வி.பியின் மாகாண சபை உறுப்பினரான வசந்த சமரசிங்கவும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
மேலும், அர்ஜூன் அலோசியஸியசுக்கும், நாமல் ராஜபக்ஷவிற்கும் இடையில் 800 இற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாமல் இந்த விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதன் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்ட 118 பேர் தொடர்பில் கருத்துகள் எதனையும் முன்வைக்கவில்லை எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.