சிங்கள மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணி!

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ்ப்பாண நகரில் இன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இந்தப்பேரணி நடைபெற்றது.
யாழ். பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி பிரதான வீதியூடாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்தது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற தெற்கு மீனவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாவட்ட செயலரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.