சிரியாவில் ரஷிய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 17 பேர் பலி.

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டெர்ரா மாகாணத்தின் முசாயிப்ரியா நகரை கிளர்ச்சியாளர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களிடம் இருந்து முசாயிப்ரியா நகரை மீட்பதற்காக சிரியா நாட்டு ராணுவ வீரர்கள் அங்கு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ராணுவத்துக்கு உதவும் வகையில் ரஷிய படைகள் முசாயிப்ரியா நகரில் வான்தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஷிய போர் விமானம் முசாயிப்ரியா நகரின் மீது குண்டு மழை பொழிந்தது. அங்கு உள்ள பல்வேறு இடங்களை குறிவைத்து 35–க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன.
அதில் ஒரு குண்டு, பொதுமக்கள் தங்கியிருந்த ஒரு கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்தது. இதில் கட்டிடம் தரைமட்டமானது. சிறுவர்கள் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர்.
முசாயிப்ரியா நகரை மீட்பதற்காக கடந்த 11 நாட்களாக நடந்துவரும் போரில் இதுவரை 90–க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தகவல்களை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிரியா நாட்டு மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.