சிரியா: ரஷ்ய விமானப்படை தாக்குதலில் ஒரே நாளில் 44 பேர் பலி!!

சிரியா மீது ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் 44 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் புரட்சி படைகளின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது இந்நாட்டின் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் நடந்து வரும் இந்த ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த மூன்று மாதத்தில் மட்டும் இதுவரை 2300 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
ஐ.நாவின் பேச்சுவார்த்தைக்கு பின், இந்த போர் நடவடிக்கைகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை பெற்று வந்தனர். இதனால் சிரியா அரசு படைகளுக்கு ஆதரவாக இருக்கும், ரஷ்ய படைகள் சில நாட்களாக அமைதி காத்து வந்தன. இந்த நிலையில் சிரியாவின் புரட்சி படைகள் இருக்கும் சர்தானா கிராமத்தில் ரஷ்யா விமான தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 11 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 44 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்தொடக்கத்தில் டெயிர் இஸ்ஸார் மாகாணத்தில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு ஆதரவு படையினர் 45 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது