சுழிபுரத்தில் மாணவி றெஜினா கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்!

சுழிபுரம், காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. மானிப்பாய் – பொன்னாலை வீதியை மறித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் அந்த வீதி வழியான போக்குவரத்துகள் தடைப்பட்டன. போராட்டம் நடந்த இடத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரசியல் பிரமுகர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் இணைந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்திலேயே கூடாரத்தை அமைத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கல்வி அமைச்சு ஊடாக மாணவிகளின் பாதுகாப்புக்கு உரிய தீர்வு பெற்றுத் தரக் கோரி மாணவர்களும் சுழிபுரம் மக்களும் இன்று காலையிலிருந்து சுழிபுரம் சந்தியில் போராட்டத்தை நடத்தினர்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் போராட்ட இடத்துக்கு வருகை தந்து மக்களைச் சமாதானப்படுத்த முயன்ற போதும், வடக்கு கல்வி அமைச்சர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மாணவிகளின் பாதுகாப்பு உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நாளையும் தொடரும் என்பதால் போராட்ட இடத்தில் கூடாரத்தை அமைத்துள்ளனர்.
இதேவேளை நாளை யாழ்ப்பாணத்தில் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் மற்றும் பேருந்துத் துறையினர், வர்த்தகர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.