சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து: 30 குடியிருப்புகள் சேதம், 55 பேர் மருத்துவமனையில் அனுமதி !!!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கிய 55 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பெரும் தீ விபத்தால் 30 குடியிருப்புகள் வரை சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெர்ன் மாகாணத்தின் பெத்லகேம் மாவட்டத்தில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர இரவு 9 மணி வரை போராடியுள்ளனர். தீப்பிழம்புகள் பல மீற்றர் உயரத்துக்கு எழுந்ததாகவும், அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டு இருந்ததாகவும் அருகாமையில் உள்ள நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடியிருப்புகளில் உள்ள சுமார் 55 பேர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கட்டிடத்தில் உள்ள 30 குடியிருப்புகள் இந்த தீ விபத்தால் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் முழுமையான ஆய்வறிக்கை வெளியான பின்னரே குறித்த தகவலை உறுதிப்படுத்த முடியும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், எவரும் மாயமானதாக தகவல் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்த தீவிபத்தால் ஏற்பட்ட சேதம் மிகப்பெரிது எனவும், தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.