ஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது!!

ஜேர்மன் மியுனிச் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கூரிய கத்தியுடன் திரிந்த இலங்கை தமிழ் இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கூர்மையான கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றிதிரிவதனை அவதானித்த பயணி ஒருவர், உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
3 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த 12 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் குறித்த நபரை சுற்றிவளைத்துள்ளனர். குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழியில் பல முறை கூறிய போதிலும் சந்தேகநபர் அதனை செவிமடுக்கவில்லை. முன்நோக்கி வந்த நபரை பின்னால் இருந்த பொலிஸ் அதிகாரி பாய்ந்து பிடித்துள்ளதுடன், மிளகு தூள் கொண்ட புகை ஒன்றை அவரது முகத்தில் தூவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் குறித்த நபர் கத்தியை அங்கும் இங்கும் அசைத்து குத்த முயற்சித்துள்ளார். எனினும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 32 வயதுடைய நபர் போலந்தில் கல்வி கற்றும் இலங்கை தமிழ் மாணவன் என தெரியவந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் சென்று அங்கிருந்து கனடா செல்ல முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த இலங்கை மாணவனுக்கு எதிராக, சட்டத்தை மீறி பொலிஸ் அதிகாரிக்கு எதிராக செயற்பட்டமை மற்றும் ஆயத சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அவரது மனரீதியான நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுகொள்வதற்காக வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.