டிரம்பின் அவமதிப்பிற்கு நடுவிலும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு செல்லும் கனடா பிரதமர்.

கூட்டணி நாடுகளின் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க தவறியதாகக் கூறி கனடாவை அமெரிக்க அதிபர் விமர்சித்து வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜூலை மாதம் 11ஆம் திகதி ப்ரஸ்ஸல்சில் நடைபெற உள்ள நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஜூன் 19 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றில் வாக்களித்தபடி கனடா போன்ற கூட்டணி நாடுகள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கவில்லை என்றும் அமெரிக்காவின் வெறுப்புணர்வு அதிரித்து வருவதாகவும் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
நேட்டோ அமைப்பு மீது அமெரிக்கா பொறுமையிழந்து வருவதாக எச்சரித்துள்ள டிரம்ப் பாதுகாப்பு ஒப்பந்தங்களை பகிர்வதில் அது தோற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் அலுவலக கூற்றுப்படி, ட்ரான்ஸ் அட்லாண்டிக் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காகவும் பிரதமர் ஜஸ்டின் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு செல்கிறார்.
2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிரிமியா தீபகற்பம் உக்ரைனிலிருந்து ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது அனைவரும் அறிந்ததே.
கனடா – அமெரிக்க உறவுகள் ஏற்கனவே திருப்தியற்ற நிலையில் இருக்கும் நேரத்தில், டிரம்ப் ட்ரூடோவுக்கிடையில் வர்த்தகம் குறித்து உரசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் டிரம்பின் அந்த கடிதம் வந்துள்ளது.
இதற்கிடையில் நேற்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “கனடாவின் சர்வதேச பாதுகாப்புக் கொள்கையில் நேட்டோ மிக முக்கியமானதாகும், மிக வேகமாக மாறும் இந்த உலகில் அதிக நிலைத்தன்மையை நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் அது ஒரு முக்கிய கூட்டாளியும் ஆகும். ஏற்கனவே வலிமையாக உள்ள நமது உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும் நமது குடிமக்கள் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதற்காகவும் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்திக்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.