News

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரி செய்த மிகப்பெரிய துரோகம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்டார் என்று அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன அறிவித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதை ஜனாதிபதி எதிர்த்தார் என்பதே அமைச்சரவைப் பேச்சாளரின் கருத்தாக இருந்தது.

முன்னாள் போராளிகளுக்கு உதவுவது என்பது புலிகளை ஆதரிப்பதற்குச் சமமானது என்று ஜனாதிபதி அதற்கு விளக்கமளித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அது உண்மையானால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி அவர்களுக்குச் செய்திருக்கக் கூடிய மிகப் பெரிய துரோகம்.

இந்த விடயத்தில் மைத்திரியுடன் ஒப்பிடும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே பரவாயில்லை என்கிற எண்ணப்பாட்டை, தோற்றப்பாட்டை உருவாக்கவல்லது.

முன்னாள் போராளிகளை மறுவாழ்வு என்கிற பெயரில் தடுப்பு முகாம்களில் வருடக் கணக்கில் அடைத்து வைத்திருந்து அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கி அவர்கள் மறுவாழ்வு வழங்கப்பட்டவர்கள் என்று கூறும் அடையாள ஆவணங்களையும் அரச இலச்சினையுடன் வழங்கி, அவர்களை சமூகமயமாக்குகின்றோம் என்று கோசத்துடன் பெரும் நிகழ்வுகளையும் நடத்தி அவர்களைப் பெற்றோர்களிடம் அல்லது உறவினர்களிடம் கொழும்பு அரசு கையளித்ததன் பொருள் என்ன என்கிற கேள்வியை, ஜனாதிபதி மைத்திரியின் முன்னால் போராளிகளுக்கு உதவுவது புலிகளை ஆதரிப்பதற்குச் சமமானது என்கிற ஒற்றை வரி எழுப்பி விட்டுள்ளது.

அத்தோடு மறுவாழ்வுக்குப் பின்னர் முன்னாள் போராளிகளைச் சமூகமயமாக்கி விட்டோம் என்று கொழும்பு அரசு கூறிக் கொண்டாலும் அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் அணுகப்படுகின்றனர், அதுதான் அரச கொள்கையாக இருக்கின்றது என்பதும் ஜனாதிபதியின் கூற்று ஊடாகத் தெளிவாகின்றது.

அரசுக்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று இதேபோன்று குற்றஞ்சாட்டப்பட்ட ஜே.வி.பியினரை இதுபோன்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகாத, அவர்களைத் தமது அரசியல் சகாக்களாக, சாமான்ய மக்களாக ஏற்றுக்கொள்ள முடிந்த ஜனாதிபதிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளை மட்டுமே அப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இனவாத அணுகுமுறையன்றி வேறொன்றுமாக இருக்க முடியாது.

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஏன் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்கும் தண்டனைக் கைதிகளாக இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு ஏன் ஜனாதிபதி இன்னும் பொதுமன்னிப்பு வழங்கவில்லை என்பதற்கும் ஜனாதிபதியின் தற்போதைய கூற்று மூலம் தெளிவான பதில் கிடைத்து விட்டது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அதன் ஆயுத வடிவத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயங்கரவாதச் செயல்களாக மட்டுமே அணுகுகிறார் என்பதையே அவரது முடிவு எடுத்துக்காட்டுகின்றது.

இனப்பிரச்சினையை வெறும் பயங்கரவாதப் பிரச்சினையாக அணுகும் ஒரு நபரிடம் இருந்து, இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தைத் தெரிந்திருந்தும் தனது சுயநல அரசியலுக்காக நிராகரிக்கும் ஒரு நபரிடம் இருந்து, வாக்கு வேட்டைக்காக போலி வேடமிடும் ஒரு நபரிடம் இருந்து அரசியல் தீர்வு ஒன்று இனியும் கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட போதும் தன்னுடை கட்சியைப் பலப்படுத்துவதிலும் கட்சிப் பிளவுகளைச் சரிப்படுத்துவதிலும் காட்டும் அக்கறையை இனப் பிரச்சினைக்கான தீர்வில் காட்டமுடியாத ஓர் அரசியல் தலைவரிடம் இருந்து உருப்படியான ஏதாவது ஒன்று தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை.

இந்த நிலையில், இந்த ஜனாதிபதியையும் உள்ளடக்கிய கூட்டு அரசுக்கு முண்டு கொடுப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகக் கைவிடுவதுடன் ஜனாதிபதியின் அதிகாரங்களை அடியோடு குறைக்கும், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஆதரிக்கவும் அது முன்வர வேண்டும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top