துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது சுட உத்தரவிட்டது யார், போலீஸ் நிலை ஆணை பின்பற்றப்பட்டதா என்பதற்கு பதில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு தயக்கம் என்ன’’ என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதால், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு அமலில் இருந்தபோதும், போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22ம் தேதி பொதுமக்கள் பேரணி நடத்தினர். பனிமய மாதா ஆலயம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பொதுமக்கள் பேரணியாக சென்றனர். கலெக்டர் அலுவலகத்தை அடைந்தபோது பெரும் கலவரமாக மாறியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையானது. உடனே, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியாகினர்.
கலவரத்தை அடக்குவதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்பட்டாலும், கலவரத்தின்போது போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும். ஏன் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும். இதற்கு யார் உத்தரவை பெற வேண்டும்.
துப்பாக்கி சூடு நடத்த யார் உத்தரவிட வேண்டும். முதலில் வானத்தை நோக்கி சுட்டு கலவரக்காரர்களை எச்சரிக்க வேண்டுமென்பது உள்ளிட்ட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அனைத்தும் காவல்துறை நிலை ஆணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், போலீசார் நிலை ஆணையில் கூறப்பட்டுள்ள எந்த விதிகளையும் பின்பற்றாமல் துப்பாக்கி சூடு நடத்தியதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், துணை தாசில்தாரின் உத்தரவின்பேரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீசார் எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.இந்தநிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் கந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீசார் காவல் துறையின் நிலை ஆணை மற்றும் விதிகளை பின்பற்றவில்லை. இதனால், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைைமயில் உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். இதில் ஓய்வு பெற்ற 2 ஐகோர்ட் நீதிபதிகள், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர், மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர், டி.ஜி.பி. அந்தஸ்துக்கு குறையாத அளவில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, மூத்த பெண் வக்கீல் ஆகியோர் அடங்கிய உயர் மட்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அந்த குழுவினர் 3 மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை மற்றும் பரிந்துரைகளை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதேபோல், மதுரையை சேர்ந்த வக்கீல் முத்து அமுதநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தூத்துக்குடியில் மே 22, 23ம் தேதிகளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி கலெக்டர், தூத்துக்குடி எஸ்.பி. மற்றும் சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மத்திய உள்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணைைய சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, தூத்துக்குடி சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அதற்கான அறிவிப்பு ஆணையை தாக்கல் செய்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி எம்.வி.முரளிதரன், ‘‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது காவல் துறையின் நிலை ஆணை (police Standing order) பின்பற்றப்பட்டதா, இல்லையா? சுட நடத்த உத்தரவிட்டது யார் என்பது குறித்து அரசு தரப்பில் ஏன் பதில்மனு தாக்கல் செய்யவில்லை? இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம்?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘‘நிலையாணை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை கமிஷன் விசாரணையின்போது தெரியவரும்’’ என்று விளக்கினார். இதையடுத்து, துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது காவல்துறை நிலையாணை பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பாக, அரசு தரப்பில் பதில்மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 6க்கு தள்ளி வைத்தனர்.
* நீதிபதிகள்: ஏன் பதில்மனு தாக்கல் செய்யவில்லை? அரசுக்கு என்ன தயக்கம்?’
* அட்வகேட் ஜெனரல்: நிலையாணை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை கமிஷனில் தெரியவரும்’