துருக்கி விமானப்படை தாக்குதலில் 15 குர்திஸ்தான் போராளிகள் உயிரிழப்பு!

ஈராக் நாட்டின் வடபகுதி மற்றும் துருக்கி நாட்டின் கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை தாக்குதலில் 15 குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர்.
ஈராக்கில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர். இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். துருக்கி நாட்டின் தென்கிழக்கு எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இவர்கள் நடத்திய தாக்குதல்களில் சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்த குர்திஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக துருக்கி நாட்டு உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து, ஈராக் நாட்டின் வடபகுதி எல்லைக்குள் புகுந்தும், துருக்கி நாட்டின் கிழக்கு மாகாணங்களான டுன்செலி மற்றூம் சீர்ட் பகுதிகளிலும் உள்ள குர்திஸ்தான் முகாம்களின்மீதும் துருக்கி விமானப்படைகள் நேற்றும் இன்றும் அதிரடியாக தாக்குதல் நடத்தின. இதில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.