தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகியோர் வந்து உள்ளனர்.
இவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயம் அடைந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் 9 போலீஸ்காரர்கள் உள்பட சுமார் 45 பேர் ஆணையம் முன்பு நேற்று காலையில் ஆஜரானார்கள். அவர்களிடம் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்களின் பதில்களையும் பதிவு செய்து கொண்டனர்.
அதேவேளையில் தேசிய மனித உரிமை ஆணைய குழுவை சேர்ந்த 2 பேர் மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு சென்றனர். அங்கு தங்கி உள்ள ஊழியர்களின் குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து விவரமாக கேட்டறிந்தனர்.
மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
மேலும், இந்த ஆணையத்தின் உறுப்பினர்களான புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங் ஆகியோர் நேற்று மதுரை சென்றனர். மதுரை விமான நிலையத்திலுள்ள வி.ஐ.பி. அறைக்கு தூத்துக்குடி முன்னாள் கலெக்டர் வெங்கடேஷை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.
காலை 11 மணிமுதல் 1 மணி வரை நடந்த இந்த விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்தும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்தும் விசாரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக வருகிற 7-ந்தேதி வரை தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்த உள்ளார்கள்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணைய அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக விசாரணையை தொடர்ந்தார். துப்பாக்கிசூடு மற்றும் தடியடியில் இறந்த சுனோலின், கார்த்திக், மணிராஜ், ஜான்சி, அந்தோணி செல்வராஜ், செல்வசேகர், தமிழரசன் ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், விசாரணை ஆணையம் முன்பு தைரியமாகவும், எந்தவித அச்சமும் இல்லாமல் தகவல்களை தெரிவிக்குமாறு அவர்களிடம் தெரிவித்தார். அப்போது, துப்பாக்கி சூட்டில் இறந்த மணிராஜின் உறவினர்களிடம் அரசு வழங்கிய இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் வழங்கினார்.
இதையடுத்து கலவரம் நடந்த இடமான கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அருணா ஜெகதீசன் அங்கு தீவைத்து எரிக்கப்பட்டு கிடந்த மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் கல்வீச்சில் சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்டார்.
துப்பாக்கி சூடு நடந்த இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உள்பட பலர் உடன் இருந்தனர்.