India

தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட துப்பாக்கி சூடுதான்: கள ஆய்வில் அம்பலம்…..

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என மக்கள் உரிமை கழகத்தின் உண்மை அறியும் குழுவின் நேரடி கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமை கழகத்தின் உண்மை அறியும் குழுவின் கள ஆய்வு அறிக்கையை அதன் ஒருங்கிணைப்பாளர் மலரவன் நேற்று சென்னையில் வெளியிட்டார். கள ஆய்வு அறிக்கையை வெளியிட்டு பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து எங்களின் உண்மை கண்டறிவதற்கான குழுவினர் கடந்த 30 மற்றும் 31ம் தேதிகளில் நேரடி கள ஆய்வினை நடத்தினோம். எங்கள் கள ஆய்வில் காவல்துறையினரால் பலியான குடும்பத்தினர் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் கள ஆய்வு நடத்தினோம். இந்நிலையில் போராட்டம் 100வது நாளை எட்டியபோது ஆண்,பெண் பாகுபாடின்றி கலந்துகொண்டனர்.

முற்றுகை போராட்டம் நடத்த வந்த மக்கள் தங்களுடன் உணவு, தண்ணீர் போன்ற பொருட்களையே எடுத்து வந்துள்ளனர். மக்கள் பேரணியாக கிளம்பி விவிடி சிக்னல் அருகே வந்த போது தான் மக்கள் மீது காவல்துறையினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இதேபோல், மக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் வருவதற்கு முன்பே அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. அரசும், காவல்துறையும், ஸ்டெர்லைட் நிறுவனமும் சேர்ந்தே திட்டமிட்டு தங்களது கூலிப்படையின் மூலம் வன்முறையை ஏவியுள்ளது.

மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு காவல்துறையினர் கைத்துப்பாக்கிகளையும், எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளனர். பெரும்பாலான மக்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து சுடப்படுகிறது என்றே தெரியவில்லை. மக்களின் குறைகளை கேட்க யாரும் வரவில்லை. இது திட்டமிட்ட துப்பாக்கி சூடாகவே இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top