தூத்துக்குடி சம்பவம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் நேரில் ஆஜராக தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன்..

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேரில் ஆஜராக தேசிய மனித உரிமை ஆணையம் சம்மன் அளித்துள்ளது. இந்த சம்பவங்களில் காயமடைந்த 63 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களும், காயமடைந்தவர்கள் இன்றும் விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடி மக்கள் 99 நாட்களாக போராடினர். போரட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ந்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு யில் பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் மோதலாக மாறியது. இதனையடுத்து போலீஸ் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடி தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜராஜன் சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் என கோரியிருந்தார்.
மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரர் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகி தனது வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், மூத்த போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மூன்று துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை கொண்டு உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியது.
இதனையடுத்து மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை இன்று பார்வையிடுகின்றனர். பின்பு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள். இதற்காகவே தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேரில் ஆஜராக தேசிய மனித உரிமை ஆணையம் சம்மன் அளித்துள்ளது.