India

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : தேசிய மனித உரிமை ஆணைய குழு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை.

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேற்று நேரில் விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வந்தனர். எஸ்.பி.விபுல் பிரிட்டோ பிரசாத், டிஎஸ்பிக்கள் ராஜ்வீர்சிங், நிதின்குமார், அருண் தியாகி, இன்ஸ்பெக்டர் லால்பகார் ஆகியோர் அடங்கிய இக்குழுவினர், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி, தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரட்கர், எஸ்பி முரளிரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் கலவரத்தின் போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் எரிக்கப்பட்ட வாகனங்களை பார்வையிட்டனர்.

தொடர்ந்து நேற்று காலை இக்குழுவினர் 3 பிரிவாக பிரிந்து, போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் தனித்தனியாக சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஒரு குழுவினர், மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி துப்பாக்கி சூட்டில் பலியான 8 பேரின் குடும்பத்தினர் நேரில் வந்து இக்குழுவினரிடம் விபரங்களை தெரிவித்தனர். மேலும் கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களில் சிலரும் மனுக்கள் அளித்தனர்.

தொடர்ந்து மதியமும் இக்குழுவினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். இந்த குழுவினர் வரும் 6ம் தேதி வரை தூத்துக்குடியில் தங்கியிருந்து விசாரணை நடத்துகின்றனர். நாளை துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர். முழுமையான விசாரணை முடிந்ததும் 6ம் தேதி புறப்பட்டு செல்லும் இக்குழுவினர் விசாரணை அறிக்கையை ஓரிரு நாட்களில் தாக்கல் செய்கின்றனர்.

ஒரு நபர் கமிஷன் விசாரணை இன்று துவக்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த கமிஷன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இன்று முதல் (4ம் தேதி) விசாரணையை தொடங்குகிறது. இதற்காக கமிஷனின் விசாரணை அதிகாரியான நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று தூத்துக்குடி வருகிறார். தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் முறைப்படி விசாரணையை அவர் துவக்குகிறார். முதற்கட்டமாக துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.

மாணவி உடல் ஒப்படைப்பு

துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்நோலினின் உடலை பெறுவது தொடர்பாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஸ்நோலினின் உடலை பெற அவர்கள் சம்மதித்தனர். நேற்று காலை 10.25 மணி அளவில் தந்தை ஜாக்சனிடம், ஸ்நோலினின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரண நிதியாக ₹20 லட்சம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பாதுகாப்பாக மினி சகாயபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top