India

தூத்துக்குடி போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு – தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 6 பேர் கைது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22ம் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.

இதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன. ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

பாளையங்கோட்டை சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கலீல் ரகுமான், முகமது யூனுஸ், முகமது இஷ்ரப், வேல்முருகன், சரவணன் மற்றும் சோட்டையன் ஆகிய 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் இன்று கைது செய்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top