News

தென்கொரியாவில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ராணுவ முகாமை காலி செய்தது அமெரிக்கா

தென்கொரியாவின் சியோல் நகரில் இரண்டாம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் முகாம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டுள்ளது.

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை, உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. தடையை மீறி, அணு ஆயுத சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனை என பல்வேறு நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானது.

இதையடுத்து ஐ.நா சபை, அமெரிக்க உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியது. எனவே தென்கொரியாவிற்கு பலம் சேர்க்கும் வகையில் அமெரிக்க ராணுவத்தினர் செயல்பட்டனர். இருநாடுகளும் இணைந்து, பல்வேறு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பால், இருநாடுகளுக்கு இடையே தற்போது மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சியோல் நகரின் தெற்கு பகுதியில், அமெரிக்க ராணுவம் புதிய தலைமையகத்தை உருவாக்கியுள்ளது. இதையடுத்து தென்கொரிய தலைநகரான சியோலில் இருந்த ராணுவ முகாமை அமெரிக்கா காலி செய்துள்ளது.

இந்த ராணுவ முகாம் கடந்த 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பின், தென்கொரியா, அமெரிக்கா இடையேயான நட்புறவால் அந்த முகாம் தொடர்ந்து நீடித்து வந்தது. இதன்மூலம் தென்கொரியாவின் சியோல் நகரில் கடந்த 70 ஆண்டு காலமாக செயல்பட்டுவந்த அமெரிக்க ராணுவத்தினரின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top