நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை: மகிந்த ராஜபக்ச !

நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் கூற்று தொடர்பில் ஆராய்ந்து உண்மைத் தன்மையை நாட்டுக்கு தெரியப்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, விஜேராமவில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் பேசிய அவர், “நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லையென்பது தற்பொழுது தெளிவாக விளங்குகின்றது, பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி தகுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே இதற்கான ஒரே வழி.
ஜனாதிபதியின் நேற்றைய உரையில் அரசாங்கத்தின் நிலைமை தெளிவாக விளங்குகின்றது. பிரதமர் ஒரு பக்கமும், ஜனாதிபதி இன்னுமொரு பக்கமும் உள்ள நிலையில் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. இதுபோன்ற நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. இதனால் தேர்தல் ஒன்றை நடாத்தி பொருத்தமானவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனியடையே, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நான் ஹெலிகொப்டரில் பயணித்தமை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். எனினும் நான் ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பயணித்தேன். அதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னரே நான் கொழும்பிலிருந்து பயணித்தேன். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையில் முன்னையவர் பதவியில் இருப்பார்” என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.