News

நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வடக்கு முதலமைச்சருடன் சந்திப்பு!

சுற்றுலா மையங்களினால் பெறப்படும் வருமானங்கள் ஊடாக வடபகுதி அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர அந்த வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது என நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென் ப்ரோலிச் ஹொல்றேவிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 3 நாள் பயணமாக வந்த நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென் ப்ரோலிச் ஹெர்றே மற்றும் அவரது குழுவினர் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பின் நிறைவில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது, புலம்பெயர் தமிழர்கள் யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்டதுடன், புலம்பெயர் மக்களின் விரும்பம் தொடர்பாக என்னுடைய கருத்தினை அறிந்துகொண்டார். புலம்பெயர் மக்களை வித்தியாசமாக நினைப்பதில்லை. புலம்பெயர் மக்கள் இங்கு வேலைத்திட்டங்களை செய்வதில் எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை. புலம்பெயர் மக்களின் ஆதரவு அவசியம்.

வடக்கில் தொழில்நுட்ப நிலையம் ஒன்றினை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சரின் நிதி நியதிச் சட்டத்தினையும் ஏற்றுக்கொண்டால், புலம்பெயர் மக்களின் நிதிகளைப் பெற்று வடக்கில் பல வேலைத்திட்டங்களை செய்ய முடியும். ஆனால், இன்னும் வடமாகாண முதலமைச்சர் நிதி நியதிச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படால் உள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள கரையோரப் பகுதிகள் மிக அழகாக இருப்பதாகவும், வலுவுள்ள சுற்றுலா மையங்களாக மாற்ற முடியுமென்றும் கூறினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். யாழ்.மாவட்டத்தில் உள்ள கரையோரப் பகுதிகளில் உள்ள மாசுகளை அகற்ற வேண்டுமென கூறினேன், அதனை அவரும் வரவேற்றார்.

உலகலாவிய ரீதியில் கடல்வளத்தினை பாதுகாக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருவதனால், முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் ஆராய்ந்து அவற்றினை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும், அதன்பொருட்டு கடற்கரையினை சென்று பார்வையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தவகையில், தமிழ் மக்களின் பாரம்பரியங்கள் பாதிக்கப்படாமல், சுற்றுலா மையங்கள் அமைக்க வேண்டுமென்பதில் கரிசனையுடன் இருப்பதுடன், வருமானத்தினை பார்க்காமல் சுற்றுலா மையங்கள் அமைக்கவில்லை என்றும், அரசாங்கம் அவ்வாறான நிலைப்பாட்டில் தான், இருப்பதாக எடுத்துக்காட்டினேன்.

அரசாங்கத்திற்கு இந்த இடத்தில் இருந்து எவ்வளவு வருமானம் வரும் என்பதே அவர்களின் கரிசனை என்றும் எங்களைப் பொறுத்தவரையில், வாழ்க்கை நிலைகள் மாற்றப்படாத நிலையில் இவைகள் நடைபெற வேண்டுமென்றும் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top