பணம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலிருந்தால் வெளியிடுங்கள்.

பேர்பெச்சுவல் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்துமாறு சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக்சமரவிக்கிரம ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளரிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மலிக்சமரவிக்கிரம இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
திறை சேரி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையுடன் பேர்பெச்சுவல் நிறுவனத்திடம் பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணமும் இணைக்கப்பட்டுள்ளது என்றால் அதனை பகிரங்கப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில சமூக ஊடகங்கள் பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு வருகின்றன என தெரிவித்துள்ள அமைச்சர் என்னுடைய பெயரும் இடம்பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்தோ அல்லது தனிநபரிடமிருந்தோ நான் எந்த பணத்தையும் பெறவில்லை என மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பட்டியல் சட்டமா அதிபர் திணைக்களத்திடமோ,அல்லது சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடமோயிருந்தால் அதனை வெளியிடுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.