பரபரப்படையும் கொழும்பு அரசியல்! மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம்…

இலங்கை மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையில் பகிரங்கப்படுத்தப்படாத விடயங்களைப் பகிரங்கப்படுத்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார். இது கூட்டரசின் பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அறிய முடிகின்றது.
கடந்த புதன்கிழமை மாதுலுவாவே சோபித தேரரின் பிறந்த தின நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் உரையாற்றிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியை கடுமையாகச் சாடியதுடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
இந்த உரை கூட்டரசில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணை அறிக்கையைப் பகிரங்கப்படுத்த அரச தலைவர் தீர்மானித்திருப்பது அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்துவதிலுள்ள சட்ட நியாயப்பாடுகள் தொடர்பாக அரச தலைவரின் செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, சட்டமா அதிபரின் ஆலோசனையை நேற்று எழுத்துமூலம் கோரியிருக்கிறார் எனத் தெரியவந்தது.
இந்த அறிக்கையை வெளியிடுவதில் சட்டச்சிக்கல்கள் எதுவும் இல்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிக்கலாம் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அறிக்கை வெளிவரும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அது பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது. அலோசியஸிடம் நிதி உதவி பெற்றவர்களின் பெயர் விவரங்களும் வெளிவரும் என்பதால் இந்த விடயம் பெரிதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.