India

மக்கள் விசாரணை குழு வலியுறுத்தல் துப்பாக்கிசூடுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை….

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மக்கள் விசாரணை குழு வலியுறுத்தி உள்ளது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் தலைமையில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குனர்கள், மூத்த வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளனர். அவர்கள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு, தடியடி, அத்துமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து குழு உறுப்பினர்கள் ஹென்றி டிபேன், வக்கீல் திலக் உள்ளிட்டவர்கள் அளித்த பேட்டி: 100 நாட்களாக போராடும் மக்களை கலெக்டர் சந்திக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது. துப்பாக்கி சூடு நடந்தபோது கலெக்டர், சப்-கலெக்டர், தாசில்தார் ஆகியோர் தூத்துக்குடியில் இல்லை. அரசு மருத்துவமனையில் நோயாளிகளும் உறவினர்களும் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகர் பகுதியில் போலீசார் வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி மக்களை அடித்து, இளைஞர்களை கைது செய்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்காக நினைவு சின்னம் அமைக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவல்துறையின் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top