மஹிந்த எந்தக் கட்சி அவரிடமே கேட்கவேண்டும் – பஷில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவரா? அல்லது பொதுஜன பெரமுனவை சேர்ந்தவரா? என்ற கேள்விக்கு மஹிந்தவே பதில் தரவேண்டும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றுக்கு நேற்று வருகைத்தந்திருந்த போதே இந்த கேள்வியை ஊடகவியலாளர்கள் பசிலிடம் முன்வைத்திருந்ததுடன் அவர் பதிலளித்திருந்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஆலோசனைக் குழுவின் அங்கத்தவர்களாக முன்னாள் ஜனாதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம். ஜெயரத்ன ஆகியோர் ஆலோசனைக் குழுவின் அங்கத்தவர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் “மஹிந்த இனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியா? அல்லது பொதுஜன பெரமுனவா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளிக்கும் போது “இந்த கேள்வியை மஹிந்தவிடம் கேட்டால் நல்லது” என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.