மாகாணசபை தேர்தலை தாமதித்தால் கடும் நடவடிக்கை-தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை!!

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தாமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நடத்திய பேச்சுவார்த்தையின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் கடப்பாடு தமக்கு உண்டு என்றும், அவ்வாறு நடத்தப்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் வழங்கியுள்ளதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் கட்சிகளுக்குள் பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. எனினும், புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவதில் தொழிநுட்ப பிரச்சினைகள் காணப்படுதாக கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. எனினும், அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, தேர்தலை தாமதிக்கக் கூடாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் ஏற்கனவே முடிவடைந்ததைத் தொடர்ந்து அவை கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி இடம்பெறுகிறது.
இதேவேளை, வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பதவிக்காலம் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.