மிசோரமில் பயங்கர விபத்து : பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 9 பயணிகள் பரிதாப சாவு….

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மிசோரம் மாநில தலைநகர் ஐஸ்வாலில் இருந்து மியான்மர் நாட்டின் எல்லையையொட்டியுள்ள சியாகா மாவட்டத்தை நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. ஓட்டுனருக்கு தூக்கம் வந்ததால், பஸ்சை அவரது உதவியாளர் ஓட்டிச்சென்றார்.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை 54ல் சென்று கொண்டிருந்த அந்த பஸ் பங்கஜவால் கிராமம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த பயணிகள் அலறினர். பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 21 பயணிகள் காயம் அடைந்தனர்.