முதலமைச்சர் போட்டியிலிருந்து ஒதுங்கமாட்டார் மாவை. சேனாதிராசா!!

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா ஒதுங்கிக் கொண்டதாக இணையத் தளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என்று, மாவை.சேனாதிராசா அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தம்மிடம் நேரடியாகத் தெரிவித்ததாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ‘உதயனுக்குத்’ தெரிவித்தன.
வடக்கு மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகயார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, கூட்டமைப்பின் சார்பில் இடம் வழங்கப்படாது என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்புக் கோரினால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் என்றும், கடந்த தடவை முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் விட்டுக் கொடுத்து தவறிழைத்ததைப் போன்று இம்முறை தவறிழைக்க மாட்டேன் என்றும், மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்திருந்தார்.வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கின்றார். எதிர்கட்சித் தலைவர் யாழ்ப்பாணத்துக்கு இன்று வருவதை முன்னிட்டு, அவருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று சந்திப்புக்கள் இடம்பெறலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் சில இணையத்தளங்களில் நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. அடுத்த முதலமைச்சர் வேட்பாளரிலிருந்து ஒதுங்குவது கட்சிக்கு நல்லதெனில் என்னை நினைத்து சங்கடப்பட தேவையில்லை. நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்ற முடிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா வந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவின் வீட்டுக்கு நேரில் சென்று, நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருக்கமான ஒருவர் கேட்டுள்ளார். அந்தச் செய்தியை அவர் முற்றாக மறுத்துள்ளார். அப்படி ஒன்றும் கூறவேயில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.