மைத்திரி – ரணில் சந்தித்து பேசியதில் முடிவுக்கு வந்தது மோதல் !

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் அண்மை காலமாக ஏற்பட்டிருந்த மோதல் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததுடன், வார்த்தை தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள தனது இல்லத்தில், பிரதமருடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டரை மணிநேரம் பேச்சுக்களை நடத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான உறவுகளில் எரிச்சலூட்டும் வகையிலான தொடர் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது குறைந்தபட்சம், பிரதானமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, மகிந்த அமரவீர, துமிந்த திசநாயக்க ஆகிய அமைச்சர்களே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்து ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் இந்த அமைச்சர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, கபீர் காசிம் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய அவர்கள், பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். >இந்த சந்திப்பின் போது முக்கியமான பல விடயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.