ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிக்க கோரும் மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி…

புதுடெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் 7 பேரும் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி பெரும்புதூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், ஜெயகுமார், சாந்தன் ஆகிய 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த நேரத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில்,”ராஜிவ்காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து வழக்கு விசாரணையின் முடிவில் தெரியவரும். இருப்பினும் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய விருப்பமா?, இல்லையா? என்பது குறித்து மத்திய அரசு 3 மாதத்தில் முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த காலக்கெடு கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் ராஜிவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் தொடர்பாக சில விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடந்த 11ம் தேதி கடிதம் அனுப்பியது. அதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரின் தற்போதைய உடல் தகுதி என்ன?, மனரீதியாக அவர்கள் அனைவரும் எந்த நிலையில் உள்ளனர். மற்றும் அவர்கள் ஏழு பேரின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் சமூக பின்புலம் என்ன என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக கொடுக்கும் படி கேட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசு மேற்கண்ட விவரங்களை
விரைவில் அறிக்கையாக தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு அவசர கடிதம் அனுப்பப்பட்டது. அதில்,” ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தமிழக அரசின் மேற்கண்ட கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பரிந்துரை செய்து அனுப்பினர். தமிழக அரசு கடிதத்தை பரிசீலனை செய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதனை தற்போது நிராகரித்துள்ளார். அதில்,”ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கைதிகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் மத்திய அரசும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் தற்போது எந்தவித புதிய உத்தரவும் பிறக்க முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பார்வையோடு மாநில அரசின் பார்வையானது முற்றிலும் ஒத்துப்போகாமல் வேறுபாடாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ள அவர் தமிழக அரசின் மனுவை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். இதில் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியும் என்பதால், 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்றும், முன்னாள் பிரதமரை கொன்ற கொலையாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடக்கூடாது என உள்துறை அவருக்கு அறிவுறுத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த நிராகரிப்பு கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு முன்னதாகவே அனுப்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.