வடக்கு பற்றி தவறான அர்த்தங்களை கற்பிக்க கூடாது: ரெஜினோல்ட் குரே.

வடக்கில் ஆயுதங்கள் கண்டுபிடிப்பது சம்பந்தமாக தவறான அர்த்தங்களை கற்பிக்கக் கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே ஆளுநர் இதனை கூறியுள்ளார்.
வடபகுதியில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவது தென் பகுதி உள்ளவர்களுக்கு புதிதான விடயமாக இருக்கலாம். ஆனால் வடபகுதி மக்களுக்கு அது புதிய விடயமல்ல.
ஒட்டுச்சுட்டானில் அண்மையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பெரிய மழைப் பெய்த பின்னர் உடனடியாக தண்ணீர்வற்றி விடுதில்லை. அது போலவே போர் முடிந்த போதிலும் அன்று பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும்.
இதனை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து தவறான அர்த்தங்களை கற்பிக்கக் கூடாது. நாட்டிற்குள் சில பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்றாலும் தென் பகுதியின் நட்புறவை வடக்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.